பெருவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் விமானம்.
|
பெரு நாட்டில் பயணிகள் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை மதியம் 12.55 மணிக்கு நாஸ்கா நகரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகள்(Nazca Lines) அமைந்துள்ள இடத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள புவெப்லோ வியெஜோ(Pueblo Viejo) என்ற இடத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. |
|
புவெப்லோ வியெஜோ என்ற பகுதியில் புகைமூட்டத்திற்கு மத்தியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகளை பார்வையிட்ட பிறகு தனது பயணத்தை நிறைவு செய்ய தயாரான போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு சில நிமிடத்திற்கு முன்பு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துள்ளது. விபத்தின் போது விமானத்தில் 11 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 13 பேர் இருந்த நிலையில், அனைவரும் உயிரிழந்து இருப்பதாக பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானம் செஸ்னா கிராண்ட் கேரவன்(Cessna Grand Caravan) என்ற வகையை சேர்ந்த Aerodiana என்ற உள்ளூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். விபத்திற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நாஸ்கோ கோடுகள் என்பது, வானில் இருந்து பார்த்தால் மட்டுமே முழுமையாக தெரியக்கூடிய பண்டைய பாலைவன சித்திரங்கள் ஆகும். பெரு நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான நாஸ்கா கோடுகளை பார்வையிட ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100000 சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். |