இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை!
இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஒட்டகபுலம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற உறுமய சுதந்திர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மக்களுக்காக 408 காணி உறுதிகள் கையளிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பயன்படுத்தப்பட்ட காணி விடுவிப்பும் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார், அதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, விடுவிக்கப்பட்ட காணியில் மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.