பதவிக் காலத்தை நீடிப்பதற்கான யோசனை நிராகரிப்பு!
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான யோசனை அரசியலமைப்பு சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (18) பிற்பகல் அரசியலமைப்பு சபை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களுக்கு இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பரிந்துரைக்கு எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியலமைப்பு சபைக்கு தற்போதைய சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் யோசனை அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பு சபை இரண்டு தடவைகள் கூடியதுடன் இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.