தமிழகம் முழுவதும் இன்று 30 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

10.10.2021 12:30:02

தமிழகத்தில் 5-வது கட்டமாக இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.

தமிழகத்தில் வழக்கமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது.

கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்பதாலும், கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28. 91 லட்சம் பேருக்கும், 19ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16. 43 லட்சம் பேருக்கும், 26ம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 25. 04 லட்சம் பேருக்கும், கடந்த 3ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17. 19 லட்சம் பேருக்கும் என மொத்தம் 4 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 87. 57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.