ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்ள்.

03.08.2025 09:11:51

ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில்,
டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இதேவேளை, தமது நிபந்தனையை மீறினால் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் மற்றும் 100 சதவீத வரியும் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெட்வதேவ் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு தனது எக்ஸ் தளத்தில், பதில் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

 

ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல என்றும் ரஷ்யா மீதான மிரட்டல்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கே அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டார்.

அத்துடன் அமெரிக்காவின் பனிப்போர் காரணமாக, தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இதேவேளை, வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொனால் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.