இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பூட்டான் பிரதமரைச் சந்தித்தார் ஹரினி!

03.09.2026 15:28:53

உலகளாவிய உணர்வுபூர்வமான உணவு முறைமை உச்சிமாநாட்டில் முதன்மை உரையாளராகப் பங்கேற்பதற்காக பூட்டானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, திம்புவில் பூட்டான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கேவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

   

இச்சந்திப்பானது, இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான நீண்டகால, நெருக்கம் மற்றும் நட்புறவு சார்ந்த இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலா, விமானப் போக்குவரத்து மற்றும் மக்கள் இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு துறைகள் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ‎‎

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளுதல், காடழிப்பைத் தடுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ‎‎

தங்களின் நீண்டகால நட்புறவை மேலும் ஆழமாக்குவதற்கும், பொதுவான நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.‎