தாய்லாந்து துணைப் பிரதமர் இன்று இலங்கை வருகை!
தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான சிஹசாக் புவாங்கெட்கேவ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (20) இலங்கை வருகின்றார்.
அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து மன்னர் மஹா வஜிராலொங்கோர்ன் ப்ரா வஜிராக்லாவ்சாவ்யுஹுவாவின் அரச பிரதிநிதியாக, துணைப் பிரதமர் நாளை (21) கண்டியில் உள்ள அஸ்கிரிய மஹா விகாரையில் நடைபெறும் அரச கட்டின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
மூன்று நாள் விஜயத்தின் போது, துணைப் பிரதமர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு தொடர்பான தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தமானது, இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.
இது சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான பயணத்தை இலகுவாக்குவதன் மூலம், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.