
பேருந்து விபத்து 71 பேர் உயிரிழப்பு!
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
ஹெராத் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (19) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 17 சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்று மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா முத்தகி (Ahmadullah Muttaqi) உறுதிபடுத்தியுள்ளார்.
குசாரா மாவட்டத்தில் உள்ள ஹெராத் நகருக்கு வெளியே உள்ள வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தின் அதிக வேகம் மற்றும் சாரதியின் அலட்சியமே விபத்துக்கான காரணம் என ஹெராத் மாகாண பொலிஸார் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து ஈரானில் இருந்து திரும்பி தலைநகர் காபூல் நோக்கி ஆப்கானியர்களுடன் சென்று கொண்டிருந்ததா மாகாண ஆளுநர் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் சயீதி AFP செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.
மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற கட்டாயப்படுத்தும் பிரச்சாரத்தை தெஹ்ரான் தொடங்கியுள்ளது.
கடந்த மாதங்களில் ஈரானில் இருந்து ஒரு பெரிய அளவிலான ஆப்கானியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
பல தசாப்த கால போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளில் இருந்து தப்பி ஓடிய மில்லியன் கணக்கான ஆப்கானியர்களுக்கு நீண்ட கால புகலிடமாகவுள்ள ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.