நெடுங்கேணி – வெடிவைத்தகல் கிராமத்திற்குள் மக்கள் உட்செல்ல வனவளத் திணைக்களம் தடை !
வவுனியா வடக்கு, நெடுங்கேணி – வெடிவைத்தகல் கிராமத்திற்குள் மக்கள் உட்செல்ல இராணுவத்தினரும், வனவளத் திணைக்களத்தினரும் தடை விதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் குடியேற்றங்கள் எதுவும் இல்லை. அப்பகுதியில் போருக்கு முன்னர் சிறுவர் பாடசாலை ஒன்று இருந்தது. அந்தப் பாடசாலையில் வயலுக்குச் செல்கின்றவர்கள் தங்கியிருந்து செல்வார்கள். ஆனால், அப்பகுதிக்குள் உட்செல்வதற்கோ காணிகளைத் துப்பரவு செய்யவோ இராணுவமும், வனவளத் திணைக்களத்தினரும் தடைசெய்து வருகின்றார்கள்.
குறித்த பகுதியில் வசித்த மக்கள் தமது காணிகளுக்கான உறுதி ஆவணங்களை வைத்திருக்கின்ற போதும், வெடிவைத்தகல் கிராமத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து இருப்பதனால் குறித்த பகுதியில் மக்கள் உட்சென்று துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளத் தொடர்ந்தும் தடைவிதித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் ஆரம்பத்தில் 65 குடும்பங்கள் வசித்துவந்த நிலையில் தற்போது 15 குடும்பத்தினரே உள்ளனர். இந்நிலையில், தமது சொந்தக் காணிகளுக்குள் குடியேறுவதற்கு கிராம சேவையாளர், பிரதேச செயலாளரின் அனுமதிக் கடிதத்தினை இராணுவம், வனவளத் திணைக்களத்தினருக்குக் காட்டியிருந்தும், தமது சொந்தக் காணிகளைத் துப்பரவு செய்யச் சென்றபோது அனுமதி மறுக்கப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் உட்செல்ல இராணுவத்தினர் தடை விதித்த நிலையில் இதுதொடர்பாக, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலீபனிடம் முறையீடு செய்தபோது, இதுகுறித்து உரிய தீர்வைப் பெற்றுதருவதாக வாக்குறுதியளித்தும் இதுவரை தமக்கான நீதி கிடைக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதிக்குள் அம்மன் ஆலயம் இருப்பதனால் வருடந்தோறும் பங்குனித் திங்கள் உற்சவத்தினை நடத்துவதற்கு மட்டும் ஆலய வளாகத்தினைச் சுத்தப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் குறித்த பகுதி மக்கள் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.