அசம்பாவிதம் நடந்தால் மீள் வாக்குப்பதிவு!

20.09.2024 08:16:29

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது ஏதேனும் வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க நேரிடும் என்பதுடன், அங்கே மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

    

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயமானது இல்லை என்றும், வாக்காளர் அட்டை கிடைக்காதோர் வாக்களிப்பு நிலையத்தில் செல்லுபடியான அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ள அவர், “வாக்கு உங்கள் உரிமை, பலம். அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“ ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, செப்டம்பர் 21 ஆம் திகதி இயலுமானவரை காலைவேளையிலேயே சென்று வாக்குரிமையை பயன்படுத்திவிடுங்கள் என்று கேட்டுக்கொண்ட அவர், வாக்களித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள். தேர்தல் விதிமீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

தேர்தல்கள் கடமைகளுக்காக சகல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நியமனக் கடிதத்தின்படி உரிய இடத்திற்கு செல்ல வேண்டும். அவர்களின் நியமனக் கடிதங்களை மாற்றவோ, இரத்துச் செய்யவோ முடியாது. கடமைக்கு வராவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதேவேளை, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குள் தேர்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையத்திற்குள் செல்வதற்கு வாக்காளர்கள், வாக்களிப்பு நிலைய பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பிரதிநிதிகள், கண்காணிப்பு பிரதிநிதிகள், தெரிவத்தாட்சி அதிகாரியால் அனுமதி வழங்கப்பட்டவர்கள் தவிர்ந்த வேறு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது.

இதனால் தேர்தல் காலத்தில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துமாறு அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு அவசர நிலைமையின் போதும் அழைப்பதற்காக முப்படையினரும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்களிப்புகள் முடிவடைந்த பின்னர் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துவரப்பட்ட பின்னர் மாவட்டங்களில் அந்தந்த நிலையங்களில் இரவு 7 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். தபால்மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை அன்றைய தினம் பிற்பகல் 4.15 மணியளவில் ஆரம்பமாகும். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்படும்.

அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் இருந்தும் சகல முடிவுகளும் கிடைத்த பின்னரே தேர்தல்கள் செயலகத்தால் இறுதி முடிவு அறிவிக்கப்படும். ஏதேனும் வாக்கெண்ணும் நிலையத்தில் அல்லது மாவட்ட முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால் அது வரும் வரையில் காத்திருக்க வேண்டும். இதனால் முடிவுகள் வரும் வரையில் பொறுமையுடன் நடந்துகொள்ளுமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

வாக்களிப்பு நாளில் வாக்களித்த பின்னர் மற்றும் வாக்குகள் எண்ணும் காலப்பகுதியில் அனைத்து வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏதேனும் காரணம் இன்றி வீடுகளுக்கு வெளியே வீதிகளில் கூடியிருப்பதை தவிர்க்குமாறு கேட்கின்றோம்.

அதேபோன்று வாக்குகள் எண்ணப்படும் போதும் பெரிய திரைகளில் மக்களை கூட்டி பெறுபேறுகளை பார்த்தல், வீதிகளில் பட்டாசுகள் வெடித்து கூடியிருத்தல், கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், வெளிச்சமான பலுன்களை பறக்கவிடுதல் என்பன சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான ஒன்றுகூடல்கள் அனைத்தும் மக்கள் ஒன்றுதிரட்டல் குற்றமாக கருதி பாதுகாப்பு தரப்பினரால் அதனை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் முடியும்.

இதேவேளை வாக்களிப்பு நிலையத்தில் ஏதெனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரியின் அறிக்கைகமைய அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும். அது தேர்தல் முடிவுகளுக்கு பாதிப்பாக அமையுமாக இருந்தால் அங்கே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரையில் இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாது போகும் என்றார்.

இதனால் வாக்களிப்பு நிலையத்தை அண்மித்த பகுதிகளில் சுற்றித்திரிதல், வன்முறைகளில் ஈடுபடுதல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை குழப்புதல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்கின்றோம் என்றார். .

சட்டத்தை கடுமையாக செயற்படுத்துமாறு அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைதியை பாதுகாப்பதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், எந்தவொரு அவசர நிலைமையின் போதும் அழைப்பதற்காக முப்படையினரும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். தமது குடும்பத்தினரை வீடுகளில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். குடும்பத்தில் எவருக்காவது ஏதாவது நடந்தால் அதனால் அவரின் குடும்பத்தினருக்கே பாதிப்பாக அமையுமே தவிர ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாதிப்பாக அமையாது. இதனால் வாக்களித்த பின்னர் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.