தேசிய பட்டியல் ஆசனத்துக்கு காஞ்சன விஜேசேகர!
புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசிய பட்டியல் ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. |
அதேவேளை ரவி கருணாநாயக்க விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இவ்வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டிருக்கின்றார். எஞ்சியுள்ள ஒரு ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. ரவி கருணாநாயக்க அவரது பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்தமை சட்டத்தின்படி தவறல்ல. எனினும் அவர் அதனை முறையாக செய்தாரா என்பதே இங்கு பிரச்சினைக்குரியதாகவுள்ளது. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அதன் அறிக்கையை தயாரித்து வருகிறது. இவ்வாரத்தில் அந்த அறிக்கை முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அடுத்து இருப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அதனை செய்யாவிட்டால் கட்சி தற்போதிருப்பதை விட படு பாதாளத்தில் விழும். அதேபோன்று சஜித் பிரேமதாசவும் தலைமைத்துவத்தை மாத்திரம் கேட்டுக் கொண்டிருப்பதை விட, முந்தைய தலைவர்களைப் போன்று கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அரசியலமைப்பிற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 6 ஆண்டுகள் தலைமை பதவியை வகிக்க முடியும். ஆனால் அவர் விரும்பும் பட்சத்தில் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார். |