சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது

30.07.2021 11:43:56

 

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என சீனாதெரிவித்துள்ளது.

முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதன் பின்னணியில் அமெரிக்காவின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எனினும், உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சீனா ஈடுபட்டால் மட்டுமே அதனை நேர்மறையாகக் கருத வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, ஆப்கான் மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தக் கூடிய ஓர் அரசாங்கம் அமைவதற்கு சீனா ஆதரவளிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் இராணுவ ரீதியில் கைப்பற்றி, அங்கு மத அடிப்படைவாத அரசாங்கம் அமைவதை சீனா போன்ற நாடுகள் விரும்பப் போவதில்லை’ என கூறினார்.

தலிபான் பிரதிநிதிகளின் இந்த சீன சுற்றுப் பயணம், சர்வதேச அளவில் அந்த பயங்கரவாத அமைப்புக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து வருவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.