மலேசியாவில் தப்பினார் கஞ்சிபானி!

31.07.2026 08:19:37

மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள 'ரத்மலானை சைமா' எனப்படும் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைவாக, போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவனான கஞ்சிபானி இம்ரான் (KPI) தான் தங்கியிருந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தகவல் கண்டறிந்துள்ளனர்.

    

 

கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதை இலக்காகக் கொண்டு, பொலிஸ் குழுவொன்று அண்மையில் மலேசியாவுக்குச் சென்றிருந்த வேளையில், அங்கு கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பின் நெருங்கிய கூட்டாளியான 'ரத்மலானை சைமா' மலேசியப் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் நாட்டிலிருந்து சென்ற பொலிஸ் குழு, மலேசியப் பொலிஸாருடன் இணைந்து கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானை சைமா, நீண்ட காலமாக ரத்மலானையைச் சேர்ந்த 'குடு அஞ்சு' என்பவருடன் இணைந்து போதைப்பொருள் வலையமைப்பை இயக்கிவந்ததுடன், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.