நிதி நிலைமைகள் மறைக்கப்பட்டதே பிரச்சினைகளுக்கு உண்மையான காரணம்!
|
இலங்கை தற்போது ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதற்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டதே முக்கிய காரணம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். |
|
நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மையான தகவல்கள், அக்காலப்பகுதியில் இருந்த ஜனாதிபதிகளிடம் கூட மறைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தள அலைவரிசை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அங்கு அவர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான அடிப்படை காரணங்கள் மற்றும் நிர்வாக ரீதியான பலவீனங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். கடந்த 2022 ஏப்ரல் 08 அன்று தாம் மத்திய வங்கி ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்ற போது, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிகக் குறைந்த மட்டத்திற்கே வீழ்ச்சியடைந்திருந்தது என்பதை அவர் நினைவுபடுத்தினார். அத்துடன், அந்த நேரத்தில் 6 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து நந்தலால் வீரசிங்க மேலும் கூறியதாவது: “எனக்கு முன்னால் இருந்த மத்திய வங்கி ஆளுநர்களும் நிதி அமைச்சர்களும் நாட்டின் உண்மையான நிலைமையை ஜனாதிபதிக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ முறையாகத் தெரிவிக்கவில்லை. அவர்கள் எவ்விதப் பிரச்சினையும் இன்றி கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்றே தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், உண்மையான நிலைமையை மறைத்துச் செயற்பட்டதால், நாட்டின் பொருளாதாரம் பாரிய ஆபத்தில் சிக்கியது.” நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதுவே நாட்டைப் பாதுகாப்பதற்கான ஒரே தெரிவாக இருந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். |