இஸ்லாமிய அமைப்புகளின் மீதான தடை கடுமையான நிபந்தனைகளுடன் தற்காலிகமாக நீக்கம்

16.07.2023 20:13:21


  ஏப்ரல் 21 தாக்குதலையடுத்து, தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் மீதான தடை, கடுமையான நிபந்தனைகளுடன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அதன்பின், ஓராண்டுக்கும் மேலாக, புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் கொண்ட குழு, இந்த அமைப்புகளின் செயற்பாடுகளை அவதானித்து வந்தது.
நிதியுதவி கிடைக்கபெறும் மூலங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளை அவதானித்த பின்னர், தடைக்கு உள்ளாகியிருந்த 11 அமைப்புகளில் ஐந்து அமைப்புகளின் மீதான தடையை தற்காலிகமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹம்மதியா, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத், லங்கா தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,தற்காலிகமாக இந்தத் தடை நீக்கப்படுவதாகவும், குறித்த அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் நிதி திரட்டல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், இந்த அமைப்புகள் மீது மீண்டும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.