தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று!

30.10.2025 14:42:37

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, இந்த நிகழ்வானது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றக் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி,

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை.

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும்.

தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ”முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.