சித்திரவதை அறைகளில் இருந்து மீட்கப்பட்ட ஏழு இலங்கை மாணவர்கள்- உக்ரைன்

18.09.2022 09:26:10

உக்ரைன் தூதரகம்

உக்ரேனின் கார்கிவ் பகுதியில் பொதுமக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சித்திரவதை அறைகளில் இருந்து மீட்கப்பட்ட ஏழு இலங்கை மாணவர்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதுடில்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.

சித்திரவதை அறைகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த ஏழு இலங்கை மாணவர்கள், கட்டிடம் ஒன்றின் அடித்தளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக உக்ரைனின் அதிபர் செலென்ஸ்கி முன்னதாக அறிவித்துள்ளார்.

மருத்துவ கவனிப்பு

ரஷ்யப்படையினரால் குறித்த மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் அந்த பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

உக்ரைன் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவ கவனிப்புக்கு அனுப்பப்பட்டனர் என்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையினரிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் தற்போது தேடுதல் நடவடிக்கைளை உக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.