அரசாங்கம் நடுநிலையையும், நீதியையும் வெளிப்படுத்த வேண்டும்!
|
யாழ். செம்மணியில் தொடர்ச்சியாக மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக காலம் காலமாக நேர்ந்த அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாகியுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியாக முடிவெடுத்து தனது நடுநிலையையும், நீதித் தன்மையும் வெளிப்படுத்தவேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் வலியுறுத்தினார். |
|
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். செம்மணியில் 400க்கும் மேற்பட்ட எலும்புகூடுகள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. நீதியமைச்சின் அனுசரனையில் இந்த விடயத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு அரசாங்கத்திற்கு நன்றியை கூறினாலும் நீதியை பெற்றுக்கொடுக்கவும், அதனை மேலும் வலுவுள்ளதாக மாற்றுவதற்கும் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்ட மனித உடலங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் உரிய காலத்தில் எடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக காலம் காலமாக செய்யப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை உறுதிப்படுத்துவதற்காக இந்த விடயங்களை ஆவணங்களாக கொண்டுசெல்லும் பொறுப்பு உள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியாக முடிவெடுத்து தனது நடுநிலைத் தன்மையையும் நீதித்தன்மையும் வெளிப்படுத்தவேண்டும் என்றார். |