"பக்தர்கள் நலன்தான் முக்கியம்" - முதல்வர் விஜய் போட்ட உத்தரவு!
|
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொதுக் கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், நிர்வாகச் செயல்பாடுகளை சரி செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் எவ்வித சிரமத்திற்கும், பாதிப்புகளுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாகக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ள அவர், சுகாதாரம், வரிசையில் நிற்பது, பாதுகாப்பு, குடிநீர் வசதி மற்றும் சிறப்புப் பாதை அமைப்பது தொடர்பான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். |
|
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்நிலைக் ஆலோசனைக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் கோயில் நிர்வாக முறைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மாநிலத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களுக்கு ஆண்டதோறும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தை நிர்வகிப்பது மற்றும் தற்போதைய உள்ள சவால்களை சரி செய்வது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில் கறாராக உரையாற்றிய விஜய் ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், பக்தர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் சாமி தரிசனம் செய்வதை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, சுகாதாரம் மற்றும் தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேசிய அவர், கோயில் வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவீன கழிப்பறை வசதிகளைப் போதிய எண்ணிக்கையில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். வெறும் உள்கட்டமைப்புடன் நிறுத்தாமல், அவையனைத்தும் எப்போதும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய போதிய தூய்மைப் பணியாளர்களை உடனடியாக நியமித்து, தொடர் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கோடைக்காலம் மற்றும் விழா நாட்களில் நிலவும் கடும் வெப்பம், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களைப் பெருமளவில் பாதிப்பதாகக் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க, தரிசன வரிசைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டார். பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் போது தடையின்றி குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு இந்த சீர்திருத்தங்களின் முக்கிய அம்சமாக, அனைத்துத் தரப்பினரும் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் வரிசை முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், அவர்களுக்குத் தனி சிறப்பு முன்னுரிமைப் பாதைகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்களுக்கு காத்திருப்பு நேரம் குறைந்து, பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும். தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், மாநிலத்தின் பாரம்பரியத்திற்கும் சுற்றுலாத்துறைக்கும் முக்கியத் தூண்களாகத் திகழ்கின்றன. அடிப்படை வசதிகள், சுகாதாரம் மற்றும் முறையான கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் புதிய கட்டுப்பாடுகளை, விதிகளை உருவாக்குவதன் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. |