விஷ்ணு இடவனின் புதிய பயணம்.

03.09.2025 07:05:00

இளம் இயக்குநரும், லோகேஷ் கனகராஜின் முன்னாள் உதவியாளருமான விஷ்ணு இடவன், தனது அடுத்த படத்திற்காக முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். 

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ், விஷ்ணு இடவன் கூறிய கதையால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். இவருடைய கதை பெரிய நட்சத்திரங்களுக்கு ஏற்ற மாஸ் கதைகளாக இருப்பதாகவும், திரைக்கதையில் ஒரு தனித்தன்மை இருப்பதாகவும் ஐசரி கணேஷ் குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் போன்ற முன்னணி இயக்குநர்களின் வரிசையில் விஷ்ணு இடவனும் இடம்பிடிப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் ஒரு படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, அந்த படத்தை விஷ்ணு இடவன் இயக்கலாம் என்றும், அதில் விக்ரம் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணி அமைந்தால், இருவருக்கும் அது ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்.

லோகேஷ் கனகராஜின் 'மாநகரம்', 'கைதி' போன்ற படங்களில் உதவியாளராகவும், 'கைதி' மற்றும் 'விக்ரம்' படங்களில் பாடலாசிரியராகவும் விஷ்ணு இடவன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.