நியூசிலாந்தில் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் - பதவியேற்பு

26.01.2023 01:15:18

நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்(Chris Hipkins) இன்று காலை முறைப்படி பதவியேற்று கொண்டார்.

நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சி 2020-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இதனையடுத்து அக்கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டென்(Jacinda Ardern) 2-வது முறையாக பிரதமரானார். மிக இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றவர்.

பதவி விலகல் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு ஜெசிந்தா(Jacinda Ardern) முன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் பெப்ரவரி 7-ந் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன் என திடீரென அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதுபற்றி ஜெசிந்தா ஆர்டென்(Jacinda Ardern) கூறியபோது, வருகிற பெப்ரவரி 7ம் திகதியே, பிரதமராக பதவி வகிக்கும் தனது கடைசி நாளாக இருக்கும். மறுதேர்தலை கோரமாட்டேன் என கூறினார்.

அடுத்த பொது தேர்தல் நடப்பு ஆண்டின் ஒக்டோபர் 14ம்திகதி நடைபெறும் என்றும் அவர் ஊடகத்திடம் அளித்த பேட்டியின்போது கூறினார்.

சுதந்திரா தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆர்டென் பிரதமராக ஐந்தரை ஆண்டுகளாக பதவி வகித்ததுடன், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாட்டை திறமையாக வழி நடத்தி சென்றதில் அவருடைய பணி பெரும் பங்கு வகித்தது.

இந்நிலையில், திடீரென அவர் பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தனது அரசு நிறைய சாதனைகளை படைத்து உள்ளது என கூறிய அவர், அடுத்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் என தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.

புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்

இதனையடுத்து, அக்கட்சியை சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ்(Chris Hipkins) புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளிவந்தன. இதன்படி, இன்று காலை அவர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதனை முன்னிட்டு, பிரதமராக பதவி வகித்து வந்த ஆர்டென், அரசு இல்லத்திற்கு சென்று முறைப்படி தனது ஆட்சி, அதிகாரம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து, பதவி விலகல் கடிதமும் அளித்துள்ளார்.

இதன்பின், புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஹிப்கின்ஸ் மற்றும் துணை பிரதமர் கார்மெல் செபுலோனி ஆகியோர் அந்நாட்டு நேரப்படி காலை 11.20 மணியளவில் வருகை தந்தனர்.

41வது பிரதமர்

கிறிஸ் ஹிப்கின்ஸ் முறைப்படி 41-வது பிரதமராக இன்று காலை பதவியேற்று கொண்டார். அதன்பின் அவர் கூறும்போது, தனது அமைச்சரவையில், பணவீக்க பெருந்தொற்று விசயங்களை எதிர்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமுடன் கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிப்கின்ஸ், 2020-ம் ஆண்டு நவம்பரில் கொரோனா தடுப்புக்கான மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் காவல், கல்வி மற்றும் பொது சேவை ஆகிய துறைகளின் மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.