நோர்வே அதிகாரிகளுடன் சாணக்கியன் கலந்துரையாடல்!

20.06.2026 15:19:04

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டபோது, ஒஸ்லோவில், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் மற்றும் அப்பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்து, யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

 

இந்த சந்திப்பு, ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் சந்திப்புகளின் ஒரு பகுதியாக அமைந்தது.

இதன்போது, இலங்கையின் சமீபத்திய அரசியல் மற்றும் மனித உரிமை முன்னேற்றங்கள், குறிப்பாக தமிழர் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு நடவடிக்கைகளின்போது இதுவரை 380க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் செம்மணி இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பெரிய மனித புதைகுழி எனக் கருதப்படுவதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் நோர்வே அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளில் கணிசமான முன்னேற்றம் இல்லாமை குறித்து அவர் கவலை வெளியிட்டார்.

மேலும், இவ்வளவு பெரிய அளவிலான அடையாளம் காணும் பணிகளை முழுமையாக முன்னெடுக்க இலங்கையில் தற்போது போதுமான தடயவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாதீனத்தன்மை கொண்ட விசாரணையை உறுதி செய்வதற்காக, சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசு பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் மற்றும் பரப்பளவைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் மரண சூழ்நிலைகளை வெளிக்கொணரவும், நீண்டகாலமாக உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களுக்கு பதில்களை வழங்கவும் தேவையான சர்வதேச ஒத்துழைப்பை அரசு நாடத் தயாராக இருப்பதற்கான எந்தத் தெளிவான அறிகுறிகளும் இதுவரை காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சாணக்கியன் மேலும் கூறுகையில், 1998ஆம் ஆண்டு செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பாதுகாப்பாக உள்ளன.

இலங்கை அரசு விரும்பினால் உடனடியாக சர்வதேச ஒத்துழைப்புடன் டி.என்.ஏ. பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும். செம்மணி விவகாரத்தில் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் அவசியமானதுடன், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கும் உண்மையை வெளிக்கொணர்வதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை.

ஒஸ்லோவில் நடைபெற்ற இந்த சந்திப்பு, நோர்வே அரசின் இராஜாங்க செயலாளர் ஆண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக் உடனான முன்னைய சந்திப்புகளின் தொடர்ச்சியாகவும் அமைந்தது என கூறியுள்ளார்.

அந்தச் சந்திப்புகளில் பொறுப்புக்கூறல், ஜனநாயக ஆட்சி, காணி உரிமைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள், பொருளாதார அபிவிருத்தி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தன.

தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலை குறித்தும், குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் தொடர்ச்சியான தாமதம், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் பொறுப்புக்கூறல், நீதி, ஜனநாயக ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் சாணக்கியன் இந்த சந்திப்பு வேளையில் விளக்கமளித்தார்.

2024 டிசம்பரில் கொழும்பில் நோர்வே தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பில், வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்களை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், அது கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்பதையும் அவர் நினைவூட்டினார்.

அந்த யோசனை, சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை பொறுப்புடைய அமைச்சகம் எந்தவிதமான உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் தொடர்ச்சியான ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

ஒஸ்லோவில் நடைபெற்ற இந்தச் சந்திப்புடன், சாணக்கியனின் ஐரோப்பிய பயணம் நிறைவடைந்தது.