சென்னை அணி 'த்ரில்' வெற்றி
கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை அணியும் மற்றும் கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கோல்கட்டா அணி 171 ரன்களை குவித்தது.
கேப்டன் மோர்கன் 8 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தாலும் மறுமுணையில் ராகுல் திரிபாதி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார். 33 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி 45 ரன்களை விளாசினார். 89 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது நிதிஷ் ராணா அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்த உதவினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல் 15 பந்துகளில் 18 ரன்களை விளாசினார். கடைசி சில ஓவர்களில் தினேஷ் கார்த்திக் 26 ரன்களை விளாச அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட் 28 பந்துகளில் 40 ரன்களும், ஃபாப் டூப்ளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்களும் அடித்து அசத்தினர். இதனால் முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 74 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் வந்த மொயின் அலி 32 ரன்கள் அடிக்க ஓரளவிற்கு சிஎஸ்கேவின் ரன்கள் உயர்ந்தது.
ஆனால் அதன்பின்னர் வந்த வீரர்கள் பெரும் அளவில் சொதப்பினர். அம்பத்தி ராயுடு 10 , சுரேஷ் ரெய்னா 11, தோனி 1 ரன் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 142 ரன்களுக்கு சிஎஸ்கே அணி 6 விக்கெட்களை இழந்தது. மேலும் கடைசி 12 பந்துகளில் அந்த அணிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது.