நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!
இந்தியாவில் இளநிலை மருத்துவ கல்விக்கான , ‘நீட்’ நுழைவு பரீட்சைக்கு செல்வோருக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்,” என, டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ கல்வியில் இணைய , நீட் எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவு பரீட்சை, கடந்த மே 3ம் திகதி நடைபெற்றது.
ஆனால், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து , கடந்த 12ம் திகதி , அந்த பரீட்சை ரத்து செய்யப்பட்டு, அடுத்த பரீட்சை ஜூன் 21ம் திகதி நடத்தப்படும் என தேசிய பரீட்சை முகமை அறிவித்தது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,
நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ – மாணவியர், பரீட்சை நாளான, ஜூன் 21ம் திகதி , டெல்லி அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்து, பரீட்சை மையத்துக்கு செல்லலாம். எனவும் அதேபோல், பரீட்சை முடிந்து வீடு திரும்பவும் இலவசமாகவே பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பரீட்சை அனுமதிச்சீட்டை பேருந்து நடத்துனரிடம் காட்டி, கட்டணமின்றி பயணசீட்டு பெற்று பயணிக்கலாம்.
மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில், எந்த மாணவரும் சிரமப்படக்கூடாது என, டெல்லி அரசு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.