புதிய தந்திரோபாயங்கள் குறித்து தமிழர்தரப்பு கண்டனம்
இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் அடுத்த மாத நடுப்பகுதியில் அனைத்துக்கட்சி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிறுத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன முன்னிறுத்திய இந்த விடயத்துக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இசைவு தெரிவித்தமை - சிங்கள பேரினவாத கட்சிகளின் கூட்டு தந்திரோபாயமாகவே இருக்கலாம் என்ற ஐயம் தமிழர் தரப்பில் தோன்றியுள்ளது.
கூட்டு தந்திரோபாயம்
இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் என மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியதை அடுத்தே மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க தயார் என ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.
கோவிந்தன் கருணாகரம்
இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காண்பதாக அதிபர் அண்மையில் உறுதியளித்திருந்த நிலையில், தற்பொழுது மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை தமிழ் மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இணைந்த வட, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
சி.வி. விக்னேஸ்வரன்
அதேநேரம், இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாது செய்து மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களை ஆட்சி செய்யும் வகையில் மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலையீட்டையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் இல்லாது செய்வதற்காகவே குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க கூடாது எனவும் அவர் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு அவர் தெரிவித்தார்