இஸ்ரேல் - பாலஸ்தீன குழு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் !

08.08.2022 10:43:01

எகிப்து மேற்பார்வையில் இரவு 11 மணியளவில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலானது
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே, கடந்த 3 நாட்களாக நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. எகிப்து மேற்பார்வையில் இரவு 11 மணியளவில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலானது.இதன்மூலம், கடந்த 3 நாட்களாக நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்தது.இதனை இருதரப்பும் உறுதிபடுத்தியுள்ளன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் தளபதி தைஷர் அல் ஜபரி கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் குழு ஆகியோர் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எகிப்தின் கைரோ நகரில், இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தாக்குதலை நிறுத்துவது குறித்து இரு தரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இரவு 11.30 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களாக நடைபெற்ற "ஆபரேசன் பிரேக்கிங் டான்" மூலம், கணிசமான இலக்குகளை எட்ட முடிந்ததாக இஸ்ரேல் கருதுகிறது.மேலும், பயங்கரவாத அமைப்பு என இஸ்ரேல் கருதக்கூடிய இஸ்லாமிய ஜிஹாத்தின் ஆயுத கிடங்குகள், ராக்கெட் ஏவுகணைகள் ஆகிய பலவற்றை தங்களால் அழிக்க முடிந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினரின் கோரிக்கை படி, தங்களுடைய இரு தளபதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அப்படி நடந்தால் சண்டை நிறுத்தம் செய்ய தயார் என அறிவித்துள்ளது

. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் அமைதி தொடரும் எனவும் இல்லையெனில், தற்போது அமலுக்கு வந்துள்ள சண்டை நிறுத்தம் மீண்டும் தொடங்கும் என பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் உள்ள கைதிகள் இரண்டு பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.