அரசாங்கம் செய்வது தவறு.
|
இந்த அரசாங்கம் செய்வது தவறு என்று நீதித்துறையில் பல வருடகால அனுபவமுடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் மனச்சாட்சிக்குத் தெரியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார். |
|
அரசாங்கம் பயங்கரவாத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல் கூட்டங்கள், எதிர்ப்புப்போராட்டங்களை நடாத்திவருகின்றனர். அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக சில சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொழும்பிலுள்ள நீதியமைச்சுக்கு முன்பாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (30) தொடர் கவனயீர்ப்புப்போராட்டப் பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தன. அத்தொடர் போராட்டம் நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (6) பி.ப 2.00 - 4.00 மணி வரை நீதியமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்த அதேவேளை, மறுபுறம் நீதியமைச்சின் முன்றலில் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் 'பயங்கரவாதத்தடைச்சட்டம் எமக்கு வேண்டாம்', 'பயங்கரவாதச்சட்டங்கள் அரசைப் பாதுகாக்கின்றனவே தவிர மக்களைப் பாதுகாக்கவில்லை', 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறு', 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் ஊடாக பொதுமக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன', 'மக்களின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்கு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டுவரவேண்டாம்' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகித்து நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பிரதிபலிக்கும் வகையிலான கோஷங்களையும் எழுப்பினர். அதன்படி இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மேலும் கூறியதாவது: 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளில் மிகமுக்கியமானதாகும். 2023 ஆம் ஆண்டளவில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முற்பட்ட வேளையில், அதற்கு எதிராகவும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் நாம் நாடளாவிய ரீதியில் பாரிய கையெழுத்துப்போராட்டத்தை முன்னெடுத்தோம். அவ்வேளையில் கொழும்பில் நடாத்திய போராட்டத்துக்கு வசந்த சமரசிங்க வருகைதந்து கையெழுத்திட்டார். களுத்துறையில் நளிந்த ஜயதிஸ்ஸ கையெழுத்திட்டார். கேகாலையில் தம்மிக பட்டபென்டி கையெழுத்திட்டார். மாத்தறையில் சுனில் ஹந்துனெத்தி கையெழுத்திட்டார். அவ்வாறு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதற்கு ஆதரவாகக் கையெழுத்திட்ட நபர்கள் அங்கம் வகிக்கும் தற்போதைய அமைச்சரவையின் ஊடாக அதனைவிட மிகமோசமான புதியதொரு சட்ட வரைவு கொண்டுவரப்படுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயமாகும். இப்புதிய சட்ட வரைவு குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் இவ்விடயத்தில் எமது நிலைப்பாடும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் நிலைப்பாடும் ஒத்தவையாகவே காணப்பட்டன. பயங்கரவாதம் உள்ளிட்ட சகல குற்றங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான சரத்துக்கள் குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையின் கீழ் உள்ளன. ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டம் பதிலீடின்றி முற்றாக நீக்கப்படவேண்டும் என்பதே அந்த நிலைப்பாடாகும். இன்று இப்போராட்டத்தில் எம்மை ஒளிப்பதிவு செய்யும் மற்றும் புகைப்படம் எடுக்கும் பலர் ஊடகவியலாளர்கள் அல்ல. மாறாக அவர்கள் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெட்கப்படவேண்டியதொரு ஒடுக்குமுறை நடவடிக்கையாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள், அவ்வரசாங்கத்திடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. இந்த அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே, அதனை விடவும் மோசமான புதியதொரு சட்ட வரைவை முன்மொழிந்து மக்களை ஏமாற்ற முயல்கின்றது. இவ்விடயத்தில், குறித்த அரசாங்கத்துக்குள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார எதனையும் செய்யமுடியாத கையாலாகாத நிலையிலேயே இருக்கின்றார். பிரதமர் ஹரினி அமரசூரியவும் அவ்வாறானதொரு நிலையிலேயே இருக்கின்றார். இந்த அரசாங்கம் செய்வது தவறு என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் மனசாட்சிக்குத் தெரியும். பல வருடகாலம் நீதித்துறையில் அனுபவம் வாய்ந்த அவருக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மக்கள் ஆலோசனைகளைப் பெறும் காலப்பகுதி எதிர்வரும் 28 ஆம் திகதி நிறைவடைந்தாலும், இச்சட்டவரைவை வாபஸ் பெற்று, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கும் வரை நாம் இந்தப் போராட்டங்களை நிறுத்தக்கூடாது என்றார். |