
விஜயின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
அண்மையில் மதுரையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துகள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துகள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. அந்த மாநாட்டில் அரசியல் ரீதியாக ஈர்க்கும் கருத்துகள் இல்லை. அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம்.
எனக்கு எந்த ஆசையும் இல்லை. அரசியலில் உச்சபட்ச பதவியான முதலமைச்சர் பதவியை 3 முறை ஜெயலலிதா வழங்கி உள்ளார். 13 ஆண்டுகள் பொருளாளராக இருந்தேன். இன்று வரை அ.தி.மு.க. தொண்டனாக இருக்கிறேன். ஜெயலலிதா கூறியபடி 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் இருக்கிறது. அதற்குள் பல சூழ்நிலைகள் மாறும். அ.தி.மு.க. கட்சியின் சட்ட விதிகள் கேலிக்கூத்தாக இருக்கிறது. அ.தி.மு.க.வை யாரும் பிளவுபடுத்த முடியாது. கடந்த 4½ ஆண்டு தி.மு.க. அரசின் செயல்பாடுகள், தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழகத்தில் அ.தி.மு.க. தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும்” இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.