பூதாகரமாகியுள்ள இனக்கலவரம்

23.11.2024 09:29:02

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 இராணுவத்தினரை இந்திய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலையில், மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இனங்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் இடம்பெற்றுள்ளதன் காரணமாகவே மேலதிக இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள துருப்பினருடன் சேர்த்து, தற்போது மணிப்பூரில் மொத்தமாக 288 படையணிகள் நிலைகொண்டுள்ளன.

கடந்த வருடம் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமான இனக்கலவரத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்ந்தும் ஒரு வருட காலமாக இடம்பெறுகின்றன. இரு இனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன் 1000 பேர் வரை காயமடைந்துள்ளதாக மருத்துவத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

60, 000 பேர் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

4 , 786 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் 386 சமய வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.