இந்தியர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பு

27.09.2021 09:10:13

'கடந்த 18 மாதங்களாக இந்தியர்களுக்கு விசா வழங்க மறுப்பது, சீனாவின் அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறை' என, சீனாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.


சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதன்முதலில் கோவிட் வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து சீனாவில் தங்கிப் படித்து வந்த 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும், நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் இந்தியா திரும்பினர். இந்தியாவில் கோவிட் அலை வீசத் தொடங்கியதும், அதைக் காரணம் காட்டி, இந்தியாவில் இருந்து சீனாவுக்கான விமான சேவைக்கு சீனா அரசு தடை விதித்தது; இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்தியது.


இந்நிலையில், இந்தியா - சீனா உறவுகள் தொடர்பான 4வது உயர்மட்ட பேச்சுவார்த்தை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், 'இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் சீனாவுக்கு திரும்புவது இருதரப்பு தூதரக நிலைப்பாடு சாராத, மனிதாபிமான பிரச்னை. அவர்கள் 18 மாதங்களாக இந்தியாவில் தவித்து வருகிறார்கள். தற்போதைய கருத்து வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், வர்த்தக உறவை இந்தியா கடைபிடித்து வருகிறது. உதாரணமாக, சீன தொழிலதிபர்கள் இந்தியா வர தொடர்ந்து விசா வழங்கப்படுகிறது. இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சனையில் அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறையை சீனா பின்பற்றுவது ஏமாற்றம் அளிக்கிறது' என்றார்.