மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நோவக் ஜோகோவிச் விலகல் !

29.04.2021 11:43:30

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார்.

இதுதொடர்பாக 33 வயதான நோவக் ஜோகோவிச், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இந்த ஆண்டு மட்ரிட்டுக்குச் சென்று எனது ரசிகர்கள் அனைவரையும் சந்திக்க முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.

ஏற்கனவே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மிக நீண்ட காலமாகிவிட்டது. அடுத்த ஆண்டு உங்களைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

மூன்று முறை மட்ரிட் சம்பியனான ஜோகோவிச், தற்போது நடப்பு சம்பியனாக உள்ளார். அவர் 2019ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர், 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றினால் இரத்துசெய்யப்பட்டது.

ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டத் தொடராக செம்மண் தரையில் நடைபெறும் ‘ஏடிபி மாஸ்டர்ஸ் 1000’ தொடரான மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர், நாளை முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.