சுங்க அதிகாரி போல் நடித்து பெண்ணிடம் 95,000 மோசடி
அமெரிக்காவில் இருந்து 70,000 டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஸ்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்து மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95,000 பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்த சம்பவம் 08 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி தெரிய வருவதாவது,
அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளைகாரர் பெண் ஒருவர் மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெண் ஒருவருடன் வட்ஸ்ஆப் மூலம் நட்பு ஏற்பட்டு இருவரும் நீண்ட காலமாக நட்புறவாடி வந்துள்ள நிலையில் உங்களுக்கு பெரும் பணம் தங்க ஆபரணங்கள் வெகு விரைவில் கிடைக்கும் தான் பெரிய பணக்காரர் என பெண்ணிடம் அமெரிக்க நண்பி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினமான 08 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசியின் இலக்கத்தில் இருந்து வட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் விமான நிலைய சுங்க திணைக்களத்தில் கடமையாற்றி வருதாகவும் உங்கள் பெயர் விலாசத்திற்கு அமெரிக்காவில் உள்ள உங்கள் வெள்ளைக்கார நண்பி பாசல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த பாசலில் 70,000 டொலர் தங்க ஆபரணங்கள், கைக்கடிகாரம் இருப்பதாகவும் டொலரை பாசலில் அனுப்ப முடியாது இது சட்ட விரோதமானது எனவே இந்த பாசலை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவித்து சரி செய்து தருவதற்கு 250,000 ரூபா அனுப்புமாறும் பாசலில் உள்ள 70,000 கொண்ட டொலரை வீடுயோ படம் எடுத்து வட்ஸ் ஆப்பில் அனுப்பி காண்பித்து பணத்தை வங்கி ஊடாக அவசரமாக அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வடஸ் ஆப்பில் அனுப்பிய வீடியோ படத்தை நம்பி உடனடியாக மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் 95,000 ரூபாவை அனுப்பிய பின்னர் சுங்க திணைக்களத்தில் வேலை செய்வதாக நடித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து 95,000 ரூபா பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளதை கண்டு கொண்டுள்ளார்.
இதேவேளை அண்மை காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளது இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என 1 லட்சம் தொடக்கம் 6 லட்சம் ரூபா வரை இவ்வாறான மோசடி கும்பலுக்கு பலர் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர் எனவே இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும்.