படுகொலையாளி பசில்

09.11.2022 10:07:43

பொருளாதார படுகொலையாளியான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் போது நாட்டு மக்களை வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்..

பொருளாதார நெருக்கடியால் தோற்றம் பெறும் மக்கள் போராட்டம் பாரிய விளைவை ஏற்படுத்தும் என மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார்.

ஆகவே மக்கள் போராட்டத்தை தடுக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். பணவீக்கம் 70 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதால் பொருள் மற்றும் சேவை கட்டணம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் நடுத்தர மற்றும் தோட்ட புறங்களில் வாழும் மக்களின் சுகாதார போசாக்கு தன்மை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. நடுத்தர மக்களின் போசனை மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பாடசாலை மாணவர்களின் கல்வித்துறையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோட்ட புற மக்களின் குறைந்த வருமானம் தற்போதைய வாழ்க்கை செலவிற்கு எந்தவிதத்திலும் ஈடு செய்யும் வகையில் அமையவில்லை. மறுபுறம் இறக்குமதி தடையினால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் 54 இலட்சத்திற்கும் அதிகமானோர் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளார்கள் என யுனிசெப் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அரசாங்கம் இந்த தரவுகளுக்கு முரணாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பு ஒட்டுமொத்த மக்களின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை மிக மோசமாக காணப்படுகிறது.

எமது உறவுகள் போசனை மட்டத்தில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.