உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி அருட்தந்தையர்கள் போராட்டம்!

23.11.2021 06:12:00

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி வழங்கக்கோரியும் அருட் தந்தை சிறில் காமினியை தொடர்ந்து விசாரணைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு முன்னால் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பு மறை மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான அருட் தந்தையர்கள் அமைதியான வழியில்  இன்றைய தினம் நடத்தினர்.

அருட் தந்தையர்கள் தங்களது கைகளில் பலியானவர்களின் உருவப் படங்களை ஏந்தியவாறும் பதாகைகள் தாங்கியவாறும், செபங்களை கூறியவாறும் இந்த அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அருட் தந்தை நாகரட்ணம் மனோ குமாரன்,

“இன்றும் மூன்றாவது நாளாக அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். 

இந்தப் பயங்கரவாத தாக்குதலில் பலியான மக்களுக்கு நீதி கிடைப்பதற்காகவே நாம் இங்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்துகின்றோம். 

அவ்வாறு பலியான மக்களுக்கு நீதி கிடைப்பதற்காகவே அருட் தந்தை சிறில் காமினியும் குரல் எழுப்பினார். இவ்வாறு தொடர்ச்சியாக அவரை விசாரணைக்கு அழைப்பது முறையாகாது.  

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சூத்திராரிகளை அழைத்து விசாரிப்பதை விடுத்து, தாக்குதலில் பலியான மக்களுக்கு நீதி வேண்டி போராடுபவர்களை அசெளகரியப்படுத்துவதை நாம் வன்மையாக கண்டிருக்கிறோம் ” என்றார்.

 இதன்போது கருத்து தெரிவித்த கொழும்பு மறைமாவட்ட பேராயார் இல்லத்தின் சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த,

“இந்த நாட்டு நிலைமை குறித்து சகலரும் அறிந்துள்ளார்கள். மூன்றாவது நாளாகவும் அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரை சி.ஐ.டிக்கு விசாணைக்காக அழைத்துள்ளனர். அவரை மென்மேலும் செளகரியப்படுத்தவதற்கான வேலையையே செய்து வருகின்றனர். 

ஜனாதிபதி ஆணைக்குழு விசார‍ணை அறிக்கையிலும், நாடாளுமன்ற குழு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் வெளியே சுற்றித் திருகின்றனர். 

அவர்களை இதுவரை விசாரணைக்குக்கூட அழைக்கவில்லை. இது தொடர்பில் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அருட் தந்தை சிறில் காமினியை இவ்வாறு விசாரணைக்கு அழைப்பது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சகல விடயங்களையும் அறிந்து கொள்வதற்காகவென காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவால் ஒரு வருட காலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஆழமாக ஆராய்ந்து பார்த்தே ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

யார் யாரை ‍அழைத்து விசாரிக்க வேண்டும் என்பது குறித்து சகல விடயங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை நகைப்புக்குரியது. 

உண்மையான தகவல்கள் அனைத்தும் அந்த அறிக்கையில் உள்ளன.  உங்களுக்கு அந்த அறிக்கையில் உள்ளவற்றைக்கொண்டு செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். 

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைதுசெய்ய முடியும். இந்த தாக்கதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டவும், நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுங்கள்” என்றார்.