சேவை வரி ஜனவரிக்கு பின்னர் அமுலாகும்

02.01.2022 07:27:25

இந்த ஆண்டுக்கான பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட வரி திருத்தங்கள், நேற்று(01) முதல் அமுலாகவிருந்தபோதிலும் குறித்த திருத்தங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்திலிருந்தே அமுலாகும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட விசேட பண்ட மற்றும் சேவை வரி நேற்று முதல் அமுலாகவிருந்தது.

அத்துடன் 2,000 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் வருடாந்தம் ஒரு தடவைக்கு மட்டுமான 25 சதவீத வரி இந்த மாதம் முதல் அமுலாகும் எனப் பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் வரி திருத்தங்கள், சட்ட மூலத்தை உருவாக்குவதற்காகச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அது எதிர்வரும் 3ஆம் அல்லது நான்காம் திகதியில் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அமைச்சரவை அனுமதிக்கு முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.