தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்

19.01.2023 22:23:40

சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட இந்த விடயம் குறித்து பதில் அளித்த போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் 

இலங்கையில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு நேற்றிரவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னணியிலேயே நாடாளுமன்றத்தில் தேர்தல் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் ஆரம்பம்

இதற்கு பதில் அளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு நேற்றிரவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.