பாதுகாப்பு ஒப்பந்தத்தம்.

09.04.2025 08:23:00

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இலங்கையின் இறையாண்மை காட்டிக் கொடுக்கப்படவில்லை. முந்தைய அரசாங்களைப் போன்று எமது அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது. அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட பின்னரே அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது சுகாதாரம், வலுசக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், கிழக்கு மாகாணத்தின் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், கிராமிய வீதிகள், பாலம் உள்ளிட்ட பல துறைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு என்பவை தொடர்பில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் நாம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளதாகவும், 1815 மலைநாட்டு ஒப்பந்தத்தை விட பாரதூரமான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறிக் கொண்டிருக்கின்றனர். கையெழுத்திடப்பட்டுள்ள சில ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட காலம் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தவையாகும். மேலும் சில முந்தைய அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டவையாகும்.

எவ்வாறிருப்பினும் எமது அரசாங்கத்தில் அவை மதிப்பாய்வு செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சியேற்றதன் பின்னர் கலந்துரையாடி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

இவை அனைத்தும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனவே எவரேனும் இந்த ஒப்பந்தங்கள் என்ன என்பதை அமைச்சரவையும் அறியாது எனக் கூறினால் அது முற்றிலும் பொய்யாகும்.

சட்டமா அதிபர் திணைக்களத்திலும் நாம் அதனை சமர்ப்பித்திருக்கின்றோம். சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசேடமாக பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொறுப்புக்கள் காணப்படுகின்றன. அதற்கமைய இவ்விரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் பாதுகாப்பு படைகளின் நிபுணத்துவம், பயிற்சி பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் என்பவற்றை உள்ளடக்கியே இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எமது நாட்டின் பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லை. இது தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டுமெனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.

முந்தைய அரசாங்களைப் போன்று எமது அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது. இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் எமது நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு உள்ளடக்கமும் இல்லை. நாட்டின் இறையாண்மையும் காட்டிக் கொடுக்கப்படவில்லை.

இரு நாடுகளினதும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காரணிகளில் ஒவ்வொரு நாட்டினதும் நிலப்பரப்பையோ அல்லது நீர்பரப்பையோ பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பது அதன் சாராம்சமாகும் என்றார்.