அவுஸ்ரேலிய அணியின் ஒருநாள் தலைவராக அலெக்ஸ் கெரி !
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலிய அணியின் தலைவராக அலெக்ஸ் கெரி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
நிரந்தர தலைவர் ஆரோன் ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டதால் அவர் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், 29 வயதான அலெக்ஸ் கெரி முதல்முறையாக அவுஸ்ரேலிய அணியை வழிநடத்தவுள்ளார். இதன்மூலம் அவுஸ்ரேலிய ஒருநாள் அணியின் 26ஆவது அணித்தலைவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதுவரை 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் கெரி, 4 அரைசதங்கள் ஒரு சதம் அடங்களாக ஆயிரத்து 91 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அவுஸ்ரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் முன்னதாக நடைபெற்ற ரி-20 தொடரை 1-4 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் இழந்தது.
இதனைதொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி இன்று பார்படோஸில் நடைபெறவுள்ளது.