ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கு.

22.01.2026 14:29:26

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என அவருடைய சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து ஜெ. தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதாவின் மற்றொரு சட்டப்பூர்வ வாரிசான ஜெ. தீபக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கானது உயர்நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ. தீபா தரப்பில் வாதிடுகையில், “வருமான வரிப் பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், அதன் பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே சரியான தொகையைத் தெரிவித்தால் தாங்கள் செலுத்தத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், “வருமான வரி குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” என வருமான வரித்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தான் இந்த வழக்கு நீதிபதி சரவணன் அமர்வில் (21.01.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ. தீபா தரத் தரப்பில் வாதிடுகையில், “வருமான வரிப் பாக்கி குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, “ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது. இது தொடர்பாக 2 வாரங்களில் வருமான வரித்துறையினர் பதிலளிக்க வேண்டும். அதுவரையில் வருமான வரிப் பாக்கி வசூல் நடவடிக்கை நிறுத்தி வைக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.