அமெரிக்க வீரர் அசத்தல்: ஆறு பந்தில் 6 சிக்சர்

14.09.2021 11:05:53

அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா, 6 பந்தில், 6 சிக்சர் விளாசினார்.

ஓமனின் மஸ்கட் நகரில் அமெரிக்கா, பப்புவா நியூ கினியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் அபாரமாக ஆடிய அமெரிக்க வீரர் ஜஸ்கரன் மல்ஹோத்ரா, 124 பந்தில், 16 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 173 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்கா சார்பில் பதிவான முதல் சதமானது. அபாரமாக ஆடிய இவர், பப்புவா நியூ கினியா வீரர் டோகா வீசிய 50வது ஓவரில், 6 பந்தில், 6 சிக்சர் பறக்கவிட்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் இச்சாதனை படைத்த 2வது வீரரானார். ஏற்கனவே, 2007ல் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், வெஸ்ட் இண்டீசில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் 6 பந்தில், 6 சிக்சர் விளாசினார்.

 

நான்காவது வீரர்: தவிர, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 6 பந்தில், 6 சிக்சர் அடித்த 4வது வீரரானார் ஜஸ்கரன். ஏற்கனவே, தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் (2007, எதிர்: நெதர்லாந்து, ஒருநாள் போட்டி), இந்தியாவின் யுவராஜ் சிங் (2007, எதிர்: இங்கிலாந்து, சர்வதேச ‘டுவென்டி–20’), விண்டீசின் போலார்டு (2021, எதிர்: இலங்கை, சர்வதேச ‘டுவென்டி–20’) இச்சாதனை படைத்திருந்தனர்.