போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவிப்பு!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதத்தில், நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். வரும் 12-ம் திகதி முதல் ஒரு வாரம் நடக்கும் போராட்டத்தால் ராஜஸ்தானில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
வரும் 18-ம் திகதி நாடு முழுவதும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இதுதவிர கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 14-ம் திகதி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.