போர்ட்டோரோஸ் டென்னிஸ்
ஸ்லோவேனியாவின் போர்ட்டோரோஸ் நகரில் நடந்த போர்ட்டோரோஸ் டபிள்யூடிஏ டென்னிஸ் பைனலில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவோலினி வெற்றி பெற்றுள்ளார். நேற்றிரவு நடந்த பைனலில் ஜாஸ்மினை எதிர்த்து, அமெரிக்காவின் ஆலிசன் ரிஸ்கி மோதினார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பாவோலின் 87ம் இடத்திலும், ஆலிசன் ரிஸ்கி 38ம் இடத்திலும் உள்ளனர். இப்போட்டியின் முதல் செட்டில் இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை நீடித்தது. டை பிரேக்கரில் 7-6 என அந்த செட்டை பாவோலினி கைப்பற்றினார். 2வது செட்டில் பாவோலினியின் ஆதிக்கமே இருந்தது. தனது அதிரடி சர்வீஸ்களால், ரிஸ்கியை திணறடித்தார்.
மேலும் பிளேஸ் மென்ட்டுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். இதனால் அந்த செட்டில் ரிஸ்கி எதிர்ப்போ இல்லாமல் சரணடைந்தார்.
இறுதியில் 7-6, 6-2 என பாவோலினி வென்று, கோப்பையை கைப்பற்றினார். இது பாவோலினி வெல்லும் முதலாவது டிபிள்யூடிஏ கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாவோலினி கூறுகையில், ‘‘இந்த வாரம் எனக்கு மிகச் சிறந்த வாரம். காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் தர வரிசையில் என்னை முந்தியுள்ள வீராங்கனைகளை வென்று இந்தக் கோப்பையை கைப்பற்றி்யுள்ளேன். அடுத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஏதாவது சாதிக்க வேண்டும்’’ என்றார்.