ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் ஆணைக்குழுவுக்கு பெரும் களங்கம்!

20.05.2026 08:50:10

நிலக்கரி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அண்மையில் நடைபெற்ற மே தினப் பேரணியில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கள் ஆணைக்குழுவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நிலக்கரி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதிகளுக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.

   

நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சிகள் மற்றும் தகவல்களைப் பரிசீலிப்பதற்கான கால அவகாசம் மே 22ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுகீஸ்வர பண்டார மற்றும் பிரேம்நாத் சி. தொலவத்த உள்ளிட்ட குழுவினர் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் பிரேம்நாத் சி. தொலவத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் தலைமையில் 17 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியாகிய நாம், இந்த முறைப்பாட்டை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளோம். ரில்வின் சில்வாவின் அநாகரிகமான கருத்துக்கள் இந்த ஆணைக்குழுவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நிலக்கரி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதிகளுக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

தவறு செய்த நமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இந்த ஆணைக்குழுவின் மூலம் விடுவிக்கப்படுவார்கள் என்று ரில்வின் சில்வா ஆபத்தான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இது ஆணைக்குழுவையும் ஒட்டுமொத்த நீதித்துறையையும் அப்பட்டமாக அவமதிக்கும் செயலாகும். எனவே, நிலக்கரி மோசடியை விடவும், இந்த அவமதிப்பு அறிக்கை குறித்தே முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாம் கோருகிறோம். ஜனாதிபதி ஆணைக்குழு என்ற இந்த நாடகம், ஜனாதிபதி அநுரவின் தோழர்களையும், தமக்கேற்ற ஊழல்மிக்க அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கும் ஒரு முயற்சியாகும்.

ஒரு கடையில் ஒரு கிலோ சீனி அல்லது பருப்பைத் திருடும் சாதாரண மனிதனுக்கு எதிராக பொலிஸார் உடனடியாக நீதிமன்றத்தில் பி அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். ஆனால் நாட்டுக்கு பில்லியன் கணக்கான நட்டத்தை ஏற்படுத்திய தரம் குறைந்த நிலக்கரி மோசடிக்கு ஏன் இன்னும் நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை? பெரிய திருடர்களுக்கு சட்டம் வேறு விதமா? ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானால், அதற்கு ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பது தற்போதைய அரசாங்கத்தின் வழக்கமாகிவிட்டது. சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் தற்போதைய முகமூடி கிழிந்து போயுள்ளது என்பதை மக்கள் மத்தியில் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்றார்.