இலங்கைக்கு விஜயம் செய்கிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ?

21.04.2024 07:53:56

ஜப்பான் வெளிவிவகார ஹயாஷி யொஷிமஸா எதிர்வரும் மேமாத முற்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா ஏற்கனவே கடந்த ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கைக்கான அவரது முதலாவது விஜயமாக அது அமைந்திருந்தது.

அதன்போது கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஹயாஷி யொஷிமஸா, அனைத்துக் கடன்வழங்குனர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார். 

இவ்வாறானதொரு பின்னணியில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் மேமாதம் இரண்டாவது முறையாகவும் ஹயாஷி யொஷிமஸா இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் நம்பகுந்த தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வருகைக்கான திகதி மற்றும் நோக்கம் என்பன பற்றிய தகவல்கள் இன்னமும் வெளிவராத போதிலும், இதன்போது விசேடமாக இலங்கையின் பொருளாதார மீட்சி, கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.