“ஊக்கத்தொகையாக ரூ. 30 லட்சம் வழங்கப்படும்”.
|
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் கடந்த 23ஆம் தேதி 6 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இந்த தொடர் போட்டியானது வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பாக 122 வீரர்கள் அடங்கிய குழுவினர் 10 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். |
|
ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர் ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையைத் தூக்கி அசத்தியுள்ளார். அதாவது இப்போட்டியில் ஸ்னாட்ச் சுற்றில் 126 கிலோ எடையையும், கிளீன் அன்ட் ஜெர்க் சுற்றில் 160 கிலோ எடையையும் மிகச்சிறப்பாகத் தூக்கி இந்த வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தனது அறிமுகத்திலேயே பதக்கம் வென்று ராஜா முத்துப்பாண்டி அவர் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த இளம் வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு விளையாட்டு ரசிகர்களும், முக்கியப் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்தியத் திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். |