பேட்ரனுக்கு பதக்கம் வழங்கி கவுரவம்

10.05.2022 16:21:55

உக்ரைன் நாட்டின் மீது 9 வாரங்களுக்கும் மேலாக ரஷியா தொடுத்துள்ள போர் நீடித்து வருகிறது.  ரஷிய படையெடுப்பினை முன்னிட்டு உக்ரைனில் பதுக்கி வைக்கப்படும் கண்ணிவெடிகளை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.

 

இதில் ஜாக் ரஸ்செல் வகையை சேர்ந்த பேட்ரன் என பெயரிடப்பட்ட இரண்டரை வயது மோப்ப நாய் ஒன்று திறமையாக செயல்பட்டு வருகிறது.  இதுவரை உக்ரைனில் 200 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து கண்டறிந்து உள்ளது.

 

வீரர்களை கவுரவிக்க நடந்த பாராட்டு விழாவில் பேட்ரன் மற்றும் அதன் உரிமையாளருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பதக்கம் வழங்கினார்.

 

இதனால், போரில் பெரும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், கண்ணிவெடிகளை கண்டறிந்து அவை வெடிக்காமல் தடுக்கும் வகையில் செயலிழக்க செய்ய உதவியாக பேட்ரன் செயல்பட்டு உள்ளது.  இதனால், வெகுசீக்கிரத்தில் ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் தடுப்பு அடையாளம் ஆகியுள்ளது.

 

இதனை பற்றி படம் எடுக்கும் ஒரு நாள் வர கூடும்.  எனினும், உண்மையுடன் அது தனது பணியை செய்து வருகிறது என்று அதன் வீடியோவை வெளியிட்ட நபர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்து கொண்டார்.  பேட்ரன் குரைத்து கொண்டும், வாலை ஆட்டியபடியும் இருந்தது பார்வையாளர்களிடம் இருந்து சிரிப்பொலியை வரவழைத்தது.

 

இதுபற்றி நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஜெலன்ஸ்கி கூறும்போது, உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்றிய போர் வீரர்களுக்கு விருது வழங்க நான் விரும்பினேன்.  அவர்களுடன் இணைந்து, ஆச்சரியமிக்க இந்த சிறிய பேட்ரனும் உதவி செய்துள்ளது.

 

அது கண்ணிவெடிகளை செயலிழக்க செய்ய உதவியதுடன் மட்டுமின்றி, கண்ணிவெடி அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் தேவையான பாதுகாப்பு விதிகளை பற்றி நம்முடைய குழந்தைகளுக்கு கற்று கொடுத்தும் உள்ளது என அதற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.