இப்போது விவாதிப்பது பொருத்தமல்ல

22.02.2025 09:24:04

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடலுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்துக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாலும், அதற்கான முன்வரைவு எதனையும் சமர்ப்பிக்காத நிலையிலும் நாம் அரசியலமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதவில்லை என்றும், உரிய நேரம் வரும்போது இதுபற்றிக் கலந்துரையாடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் ஓரங்கமாக, 'புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்' எனும் தலைப்பிலான கடிதமொன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியில் கையளிக்கப்பட்டது.

அக்கடிதத்தில், 'பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், தலா ஒவ்வொரு ஆசனத்தைக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் தமிழர் தாயகத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையான 10 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இக்கலந்துரையாடல் நகர்வு அமைந்துள்ளது. அதன்படி ஜனவரி மாதம் 27 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு நடாத்துவதற்கு உத்தேசித்திருக்கும் கலந்துரையாடலில் தங்கள் கட்சியும் பங்கேற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்' எனக் கோரப்பட்டிருந்தது.

இருப்பினும் இதுகுறித்து தமது கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் ஆராய்ந்ததன் பின்னர் பதிலளிப்பதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததையடுத்து, மேற்குறிப்பிட்ட சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி சி.வி.கே.சிவஞானத்தினால் பெப்ரவரி 18 ஆம் திகதியிட்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல் எனத் தலைப்பிடப்பட்ட உங்களது கடிதம் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற எமது மத்திய செயற்குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாலும், அதற்கான முன்வரைவு எதனையும் சமர்ப்பிக்காத நிலையிலும் நாம் அரசியலமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது.

மேலும் எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்திவரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அரசாங்கம் அதன் அரசியலமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்கவேண்டும் என வலியுறுத்திக் கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. உரிய நேரம் வரும்போது நாம் இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.