என் படத்தை தடுக்கிறார்கள்

09.08.2022 10:50:16

இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'கடாவர்'. 'கடாவர்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்து தயாரித்துள்ள திரைப்படம் 'கடாவர்'. இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரையுலகினர் என பலரும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அமலாபால் பேசியது, ''கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது.

இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எங்களின் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது.

பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த 'கடாவர்' திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.