புதிய அரசியலமைப்பு.
|
நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது அவசியமாகும். அவ்வாறு உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பிற்கான பகிரங்க கலந்துரையாடல்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பங்கேற்பு அவசியம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
|
கொழும்பு - ஜானகி ஹோட்டலில் புதன்கிழமை (21) வன் டெக்ஸ்ட் இனிஷியேடிவ்வின் ஏற்பாட்டில் 'இலங்கையில் ஆட்சி நெருக்கடிகள்' எனும் தொனிப்பொருளில் ஷPரால் லக்திலகவின் தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, அஜித் பி பெரேரா, தயாசிறி ஜயசேகர ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரளவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ணவும், அநுர பிரியதரஷன யாபா, இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் அதன் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் சி தொலவத்த, கருணாரத்ன பரணவிதான உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அத்துடன் துறைசார்ந்த நிபுணர்களான லால் விஜேநாயக்க, ஜயம்பதி விக்கிரமரத்ன, விரஞ்சன ஹேரத், நிமல்கா பெர்னார்டோ, சுதர்ஷன குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது சுமந்திரன் , இளைதம்பி ஸ்ரீநாத் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் இலங்கையில் தமிழ் மக்களின் பங்கேற்பில்லாத வகையில் தான் இலங்கையில் இதுவரை உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கள் காணப்படுகின்றன. எதிர்வரும் காலத்தில் அவ்விதமான செயற்பாட்டுக்கு இடமளிக்க விட முடியாது. சமத்துவ பங்கேற்பு புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் உறுதிப்படுத்துவதுடன் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை குழுக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டும். பெரும்பான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் காணப்படுகிறது என்பதற்காகவும் நிறைவேற்றதிகாரம் இருக்கிறது என்பதற்காகவும் எதேச்சதிகாரமாக செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவதானது சமூக ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். அது மக்கள் ஆணைக்கு முரணானதாகும். ஆகவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் வெளிப்படை தன்மையுடன் பங்கேற்பது அவசியமாகும் என்றனர். இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , தயாசிறி ஜயசேகர, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்கள் அரசாங்கம் பாராளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் தீர்மானங்களை எடுக்கின்ற போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவ்விதமான நிலையில் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளையும் அவர்கள் அதே போக்கை பின்பற்றுவார்களாக இருந்தால் அது மீண்டும் பெரும்பான்மைவாத அரசியல் அமைப்பதாகத் தான் இருக்கும். பல்கட்சி பங்கேற்பு ஜனநாயக தன்மைகள், அனைத்தையும் கை கழுவும் செயற்பாடாகவே அது அமையும். அவ்விதமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. ஆகவே புதிய அரசியலமைப்பு உரையாடல்கள் அரசாங்கத்தின் பங்கேற்பென்பது அவசியமானதாகும். அதனை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது. அவர்கள் நிச்சயமாக வெளிப்படையான செயற்பாட்டில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். இதேநேரம் புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் முற்போக்கான விடயங்கள் சிலவற்றை உள்ளீர்ப்பது அவசியமாகும். உதாரணமாக தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பில் காணப்படுகின்ற சிவில் அரசியல் கலாசார உரிமைகள் உள்ளீர்க்கப்படுவதுடன் அவை அடிப்படை உரிமைகளுக்குள் உள்வாங்கப்படுவதும் மேம் பாடான அரசியலமைப்பிற்கு வழி வகுப்பதாக இருக்கும். அத்துடன் நிதி பயன்படுத்துகின்ற அதிகாரங்கள் பொருளாதார விடயங்கள், உள்ளிட்டவற்றையும் அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டியது அவசியமாகிறது. அது நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டனர். இதேவேளை கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன , லால் விஜயநாயக்க போன்றவர்கள் ஏலவே தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைவுகளை முன்மொழிவுகளையும் மக்கள் கருத்துக்களை வெளியிட்ட அறிக்கைகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பினை விடுக்க வேண்டும்; என்று குறிப்பிட்டனர். இதேவேளை பிரதமர் ஹரிணி அமரசூரிய, நீதி அமைச்சர் ஹர்ஷண நாயக்கார உள்ளிட்டவர்கள் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ள நிலையில் அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சிகளும் சிவில் தரப்பினரும் தொடர்ச்சியாக பிரயோகிக்க வேண்டும் என்றும் அங்கு கூடியிருந்த பிரதிநிதிகள் வலியுறுத்தியதோடு புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காத போக்கில் செயற்படுவார்களாக இருந்தால் அதனை முறியடிப்பதற்கான வியூகங்கள் தொடர்பிலும் திட்டமிட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். |