
ஆந்திராவை அச்சுறுத்தும் புற்றுநோய்!
ஆந்திராவில் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரபுரம் கிராமத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக 10 ஆயிரம் பேரில் 32 நபருக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி இருந்தாலும், அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகளின்படி சுமார் 100 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப் புற்றுநோய் பாதிப்பிற்கு அருகிலுள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாடே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மருத்துவ முகாம்கள் மற்றும் பரிசோதனைகளை நடத்தி, காரணங்களை கண்டறியும் முயற்சியில், மாநில அரசு இறங்கியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும் பல ஏழை மக்கள் சிகிச்சைக்கான பண வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.